வியாழன், நவம்பர் 26, 2015

புதுவையில் புத்தர் சிலைகள்


  1. அருகன்மேடு
  2. புதுவை அருங்காட்சியம்
2.1 கருவடிக்குப்பம்
2.2 கோரிமேடு- பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்
2.3 கிருமாம்பாக்கம்    
1. அருகன்மேடு
அமைவிடம்
புதுவை (அ) புதுச்சேரி (அ) பாண்டிச்சேரியில் உள்ள  அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புதுவை பேருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 9.2 கி. மீ (அ) தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக சென்றால் 10.8 கி. மீ.

சிலையமைப்பு
கை சிந்தனை கை  கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் மகரத்துடன் கூடிய தோரணம் சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம்  2 அடி அகலம் நூற்றாண்டு  கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்



அருகன்
பகவன் புத்தருக்கு 1000 சிறப்பு பெயர்கள் உள்ளது என மணிமேகலை குறிப்பிடுகிறது. 1000 சிறப்பு பெயர்களில் ஒன்று அருகன் என்பது. பகவன் புத்தரை பகவன் என்றும் புத்தர் என்றும் வடஇந்தியாவில் அழைத்தது போன்று தென்இந்தியாவில் இந்திரர் என்றும் அருகன் என்றும் அழைத்தனர்.
11 வது நிகண்டு - தகரவெதுகை
 புத்தன் மால் அருகன் சாத்தன்  
 ரகரவெதுகை 
 தருமராசன்றான் புத்தன் சங்கனோ டருகன்றானும் 
பகவன் புத்தரை இந்திரர் என்று இந்திர விழா என்று கொண்டாடிவந்ததை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம் முதலிய நூல்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்.

சாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் என்பதினால் அருகன் என்று கொண்டாடினார்கள். அனைவரும் இதனை மறவாது கொண்டாடுவதற்காக அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தார்கள். பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, உடலை எரித்து, உடல் சாம்பலை ஏழு அரசர்கள் கட்டிடங்கள் (சேதியங்கள்) கட்டிய பொழுது, அந்த உடல் சம்பல் வைத்துள்ள இடம் விளங்குவதற்காக குழவிகல்லை போல் உயர்ந்த பச்சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அந்த இடத்தில் ஊன்றி வைத்தார்கள். ஒவ்வொரு பௌத்தர்களும் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபகாலங்களில் பசுவின் சாணத்தால் குழவிபோல் சிறிதாக பிடித்து அதன் பேரில் அருகன் புல்லை கிள்ளி வந்து ஊன்றி அருகனை சிந்தியுங்கள் என்று அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தனர் என்று உரைக்கிறார் பண்டித அயோத்திதாசர் (அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II பக்கம் 106.)

அருக்கன்மேடு தான்  அரிக்கமேடானது என்று உரைக்கிறார்  பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.
  1. கசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் அரிக்கன்மேடு என்று பெயர் வரக்காரணம் புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்று குறிப்பிடுகிறார். 
  2. அருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப்பட்பட்டது. சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும்.
  3. இக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)
  4. இப்புத்தர் சிலை புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்து சமயக் கலப்புடன் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் பிரமன் கோயில் என்றழைத்தனர். அண்மை காலத்தில் விருமன் கோயில் என்று வழங்கப்படுகிறது. புத்தர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து நெற்றியிலும் உடம்பிலும் திருநீறு பூசி கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று வைக்கப்பட்டுள்ளது
சில அறிஞர்கள் அருக்கன்மேடு என்பதை அழிவின் மேடு (அ) ஆற்றின் கரை மேடு (அ) புத்தர் மேடு (அ) ஜைன மேடு என்று அழைக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் D.C Ahir (Buddhisim in South India)

2. புதுவை அருங்காட்சியம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது புதுவை அருங்காட்சியம். இங்கு இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகள் கருவடிக்குப்பம் (அ)  கரடி குப்பம் மற்றும் பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்திருந்த  கோரிமேடு என்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது. 

2.1 கருவடிக்குப்பம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்றால் 5.3 கி.மீ (அ) கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால் 6.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கருவடிக்குப்பம். இது புதுவை வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.

சிலையமைப்பு 
கை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது தோரணம் தலையை சுற்றி தோள்கள் வரை உள்ள மகர தோரணம் சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 1/2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்

Story of Buddhism with special reference to South India (Published by the Commissioner of Museums, Govt Museum, Egmore, Chennai) என்ற நூலில் இருந்து எடுத்த படம்
தற்பொழுது தலையின்றி  புதுவை அருங்காட்சியகத்தில் காணப்படும் சிலை. 


2.2 பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66 வழியாக சென்றால் 4.7 கி. மீ (அ) கராமராஜ் சாலை வழியாக சென்றால் 5.4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் கோரிமேடு.

சிலையமைப்பு
கை சிந்தனை கை  உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 5 அடி உயரம் சிலை அகலம்  3 அடி அகலம் நூற்றாண்டு  கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம். 

2.3 கிருமாம்பாக்கம்
அமைவிடம்
புதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக கடலூர் செல்லும் வழியில் 13.30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிருமாம்பாக்கம்.

சிலையமைப்பு
கிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)



மேலும் விரிவாக பார்க்க
புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-1

அரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2

அருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3

சாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4

பௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5

அருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6

போதிகாவா? பொதுகாவா? எது பழைய புதுச்சேரி?

சரவணன்  அவர்களின் காணொளி காண
https://drive.google.com/folderview?id=0B2WMRIF-1cD3WWUzMG1aNFRGUFE&usp=sharing

கருத்துகள் இல்லை :

கருத்துரையிடுக